பெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்த நிலையில் நேற்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மேகமூட்டத்துடன் அவ்வபோது சாரல் மழை பெய்து வந்தது. மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழையின் காரணமாக கடும் குளிர் நிலவி வந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக உதகை நொண்டிமேடு ஒத்த மரம் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அதில் வாசித்த ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.