நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு பகுதியான பாரஸ்ட்கேட் பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் என சுமார் 10 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குடியிருப்புகள் மண் சுவர்களால், ஓட்டு கூரைகளாக உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிக்குள் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கற்பூர மரங்கள் உள்ளன.
மழைக்காலங்களில் கற்பூரம் மரங்களிலிருந்து மரக்கிளைகள் வீட்டின் கூரை மீது விழுந்து வீடுகள் சேதமடைந்து வருவதால், எப்போது வீடுகள் இடிந்து விழுகுமோ என்ற அச்சத்தில் நாள்தோறும் தங்களது உயிர்களை கையில் பிடித்தவாறு உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும் இப்பகுதியில் போதிய நடைபாதை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி இல்லாததால் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இப்பகுதியில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும், குடிநீர் நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.