தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லையில் நீலகிரி மாவட்டம் உள்ளது. இதனால் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பயன்பாடு நீலகிரியில் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

https://youtu.be/pzMx-RiIouo

ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு நீலகிரி மாவட்டம் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்திச் செல்லப் படலாம். எனவே கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் போலீசார் தொடர்ந்து நீலகிரியில் உள்ள பழைய கஞ்சா குற்றவாளிகளை கண்காணிப்பது, விசாரணை நடத்துவது உட்பட   பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊட்டி  பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் ஊட்டி நகர மேற்கு T-3 காவல் உதவி ஆய்வாளர்கள் ஹரிஹரன், நிஷாந்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 1.100 கிலோ கிராம் கஞ்சாவும், 100 கிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சாவும் இருந்தது.

விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் காளம்பூலாவை சேர்ந்த அப்துல் வகாப் - காட்டேரி உலிக்கல் பகுதியை சேர்ந்த மெல்சர் பால் ஊட்டி வண்டிச்சோலையை சேர்ந்த சுஜன் என்பதும், தொடர்ச்சியாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.