நான்கு நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று உதகை ஆளுநர் மாளிகையில் இருந்து கோத்தகிரி சாலை வழியாக கோவை விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார் ...
குடியரசு தலைவர் சாலை மார்க்கமாக கோவை செல்வதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ...
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாட்கள் பயணமாக 27ம் தேதி தமிழகம் வந்த அவர் உதகை ஆளுநர் மாளிகைக்கு வந்தடைந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி வளாகத்தில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளிடையே உரையாடினார்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர் மாளிகையில் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களான தோடர், கோத்தர், இருளர், குறும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்களை சந்தித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இன்று திருவாரூரில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இருந்த நிலையில் கனமழை மற்றும் புயல் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உதகை ஆளுநர் மாளிகையில் இருந்து கோத்தகிரி சாலை மார்க்கமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கோவை விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து டெல்லி செல்ல உதகையிலிருந்து புறப்பட்டு சென்றார்.
முன்னதாக ஆளுநர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மரக்கன்று நடவு செய்தார்.
உதகையிலிருந்து புறப்பட்ட குடியரசு தலைவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.
குடியரசு தலைவர் சாலை மார்க்கமாக கோவை செல்வதால் உதகை கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.