மக்கள் குறை தீர்க்கும் நாள் 116 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10.09.2018) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 116 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் திருமதி ஜெ. இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார்.

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 116 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., அவர்களிடம் அளித்த மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு துறை ரீதியான அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் வருமானம் ஈட்டும் குடும்பத்தலைவர் இல்லாத குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக 53 குழந்தைகளுக்கு ரூ.9,96,000/- மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சியர் திருமதி ஜெ. இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.முருகன், உதவி ஆணையர் (கலால்) திரு.ஜெய்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.குழந்தைவேலு, ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.மணிவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சுந்தர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்