வனத்தில் விபத்து: ஆசிரியர் மற்றும் மானை மீட்ட நீதிபதி

பவானிசாகர் அருகே, சாலையை கடந்த புள்ளிமான் மீது பைக் மோதியதில், ஓவிய ஆசிரியர் காயமடைந்தார். அந்த வழியாக வந்த நீதிபதி காயமடைந்த ஆசிரியர் மற்றும் மானை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில், ஏராளமான மான்கள் உள்ளன. புன்செய்புளியம்பட்டி, நேரு நகர், அரசு நடுநிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் சுப்பிரமணி. 8.9.2018 இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் சாலை, சீரங்கராயன்கரடு அருகே திடீரென புள்ளிமான் ஒன்று சாலையை கடந்தபோது மான் மீது பைக் மோதியது. இதில் கீழே விழுந்த ஆசிரியர் சுப்பிரமணிக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் மயக்கமடைந்தார். பைக் மோதியதில் மானுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

அப்போது, அந்த வழியாக காரில் வந்த நீலகிரி மாவட்டம், ஊட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் மயங்கி கிடந்த, சுப்பிரமணி அவர்களை மீட்டு 108 ஆம்புலன்சில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தகவலின் பேரில், அங்கு வந்த பவானிசாகர் வனத்துறையினரிடம் மானை ஒப்படைத்துவிட்டு நீதிபதி சுரேஷ்குமார் புறப்பட்டு சென்றார்.