கோத்தகிரி வட்டம் நெடுகுளா ஊராட்சியில் மனுநீதி நாள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் நெடுகுளா ஊராட்சி அம்மன் நகர் சமுதாய கூடத்தில் (12.09.2018) நடைபெற்ற மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் 110 பயனாளிகளுக்கு ரூ. 32,58,592/- மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கி கூறியதாவது, இம் மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. இம்மனுநீதி நாள் முகாமின் நோக்கமே மக்களைத் தேடி அரசு என்பது தான் பொருள்.

இம்மக்கள் மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் உங்களை தேடி உங்கள் கிராமத்திற்கு வந்துள்ளனர். தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி அவை பொதுமக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து அடிப்படை வசதிகள் என்னனென்ன தேவையோ அதை நிறைவேற்றி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் நீங்களே பணிகளை எடுத்து உங்கள் ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளலாம் எனவும், மேலும் எந்த ஒரு தகவலாக இருந்தாலும், கோரிக்கைகளாக இருந்தாலும் புகைப்படமாகவோ அல்லது மனுவாகவோ 9943126000 என்ற வாட்ஸ் எண்ணிற்கு அனுப்பி வைத்தால் 48 மணி நேரத்திற்குள் உடனடியாக உங்களுக்கு தீர்வு கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

இம் மக்கள் தொடர்பு முகாமில் முதியோர்,முதிர்கன்னி,விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை ஒரு பயனாளிக்கு மாதந்தோறும் தலா ரூ.1000/- வீதம் 19 பயனாளிகளுக்கு ரூ.2,28,000/- பெறுவதற்கான ஆணைகளையும், 2 நபர்களுக்கு தற்காலிக உதவித்தொகை ரூ.24,000/-த்திற்கான காசோலையையும் 6 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.24,000/-த்திற்கான காசோலையினையும் 4 பயனாளிகளுக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.90,000/-த்திற்கான காசோலையினையும், 1 பயனாளிக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை ரூ.8,000/-த்திற்கான காசோலையினையும், 12 பயனாளிகளுக்கு விலையில்லா சலவை பெட்டி ரூ.60,000/-மதிப்பிலும், 7 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், ஹெத்தையம்மன் கேர்கம்பை வங்கியின் மூலம் 12 பயனாளிகளுக்கு பயிர்கடன் ரூ.8,95,000/-த்திற்கான காசோலையினையும், இந்தியன்வங்கி கோத்தகிரி கிளையின் மூலம் தொழில் தொடங்க 1 சுய உதவி குழுவிற்கு ரூ.5,00,000/-த்திற்கான காசோலையினையும், 2 பயனாளிகளுக்கு உயர்கல்வி பயில கல்வி கடன் ரூ.7,07,000/-த்திற்கான காசோலையினையும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 34 பயனாளிகளுக்கு ரூ.7,15,592/- மதிப்பில் நீர்தெளிப்பான கருவிகளையும், 10 பழங்குடியின பயனாளிகளுக்கு சாதி சான்றுகளும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 22 பயனாளிகளுக்கு தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரிய அட்டைகளும், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தலா 1 பயனாளிக்கு ரூ.5,100 வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.10,100/- மதிப்பில் இயற்கை வேளாண் இடுபொருட்களும் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

பின்னர் பொது மக்களிடமிருந்து 140 கோரிக்கை மனுக்களை பெற்று, துறை அலுவலர்களிடம் தகுதி இருப்பின் பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.சாந்திராமு, குன்னூர் கோட்டாட்சியர் திரு.பத்ரிநாத், கோத்தகிரி வட்டாட்சியர் திரு. ரவிக்குமார், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.