நீலகிரி மாவட்டத்தின் 150-வது ஆண்டு விழா மற்றும் பழங்குடியினர் விழா

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று (17.09.2018) நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. எஸ்.பி. வேலுமணி அவர்கள் நீலகிரி மாவட்டத்தின் 150-வது ஆண்டு விழா மற்றும் பழங்குடியினர் விழாவினை தொடங்கி வைத்து 960 பயனாளிகளுக்கு ரூ.6,74,49,810/- மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது, சொர்க்கத்தின் முகப்பு வாயிலாம், சொகுசு சுற்றுலாத்தலமாம் நீலமலை என்பது இம்மலைக்கு வைத்த பெயர் மட்டுமல்ல நம்மை மலைக்க வைத்த பெயரும் கூட ஆகும்.

மலைச்சாரலும் மலைய மாருதமும் கூடி அமைந்த குளிர்ச்சி கூட்டணி குதூகலம் செய்யும் குளிர்
மாவட்டத்திற்கு குன்றாப்புகழ் சேர்க்கும் 150-வது ஆண்டு விழா மற்றும் இம்மலை மாவட்டத்து
பழங்குடியின மக்களான மண்ணின் மைந்தர்களுக்கு மகுடம் சூட்டு விழாவான பழங்குடியினர்
விழா ஆகிய இருபெரும் விழாவில் பங்கு கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பு
செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

இனிமை தரும் இந்நந்நாளில் தபால் துறையின் மூலம் இம்மாவட்டத்தின் பாரம்பரியம்
பறை சாற்றும் வகையில் சிறப்புப் புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு அஞ்சல்தலை, தபால் உறை
வெளியிடப்படுவது பெருமைக்குரிய அம்சமாகவே கருதுகிறேன். நீலகிரி மாவட்டத்தின் சிறப்பைப் போற்றும் வகையில் என் வாழ்த்துதல்களையும் போற்றுதல்களையும் பெருமிதத்துடன் பதிவு செய்கிறேன். இம்மண்ணின் மகத்துவம் தொடர மனமார வாழ்த்துகிறேன். உலகின் 90 நாடுகளில் வாழ்கின்ற 37 கோடி பழங்குடியின மக்களின் உரிமைகளும் கலாச்சார அம்சங்களும் காக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ண நோக்கத்தின்அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் திங்கள் 9 ஆம் நாள் பழங்குடியினர் நாளாக ஐ.நா சபையில் பிரகடனப்படுத்தி கடைப்பிடிக்கப்பட்டு வருவது பெருமை சேர்ப்பதாக உள்ளது. இதற்கான பிரகடனம் ஐ.நா.சபையில் 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் முன்மொழிப்பட்டு 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 13 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. பழங்குடியின மக்களின் முன்னேற்றப்பாதையின் மற்றுமோர் மைல்கல் ஆகும்.

உலகில் பேசப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ள ஏழாயிரம் மொழிகளில் பெரும்பாலான
மொழிகள் பழங்குடியின மக்களால் பேசப்படுகின்றன என்றும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பற்பல
கலாச்சாரங்களை கடைபிடித்து வாழ்ந்து வருவதாகவும் ஐ.நா. சபை அங்கீகாரம் அளித்திருப்பது பெருமையிலும் பெருமை சேர்ப்பதாகும். மலைகளின் அரசியான நீலகிரியில் வாழ்ந்து வரும்
பழங்குடி மக்கள் பண்டைய பழங்குடி மக்கள் என அழைக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் 36 வகை பழங்குடியினர் உள்ளனர். அதில் நீலகிரியில் 6 வகையான
பழங்குடியின மக்கள் உள்ளனர். அவர்களில் தோடர், கோத்தர், இருளர், பணியர், காட்டு நாயக்கர் மற்றும் குரும்பர் முள்ளுகுரும்பர், ஆலு குரும்பர், பெட்ட குரும்பர் என வாழ்ந்து வருகின்றனர்.

இதில் தோடர் இனமக்களின் பெண்கள் அழகிய பூ வேலைபாடுகளோடு கூடிய எம்ராய்டரி
வேலைகளையும், எருமைகளையும் வளர்த்து வருகின்றனர். இவர்கள் வானவில் வடிவிலான
வீடுகளில் மந்து எனும் இடத்தில் வாழ்ந்து வருபவர்கள். கோத்தர்கள் கோக்கால் எனும் பகுதியில்
வசித்து வருகின்றனர் .இவர்கள் மண்பானை செய்தல் மற்றும் கொல்லன் பட்டரை தொழில்
செய்து வருகின்றனர். இவர்களின் குலதெய்வம் கம்பட்டியன் ஆகும்.நீலகிரியில் அதிய அளவில்
சிறுதானிய வகைகளை பயிர் செய்து வாழ்ந்து வருபவர்கள் இருளர்கள். பணியர்கள் தொழில்
விவசாயம். இவர்களின் குலதெய்வம் குளியன், தம்பிராட்டி. இவர்கள் காதுகளில் மூங்கில்
குருத்தினை அழகாக வடிவமைத்து காதுமணி,சூதுமணியை அணிகளாக அணிவார்கள்.
குரும்பர்கள் மூங்கிலால் ஆன கைவினை பொருட்களை செய்வதில் கைதேர்ந்தவர்கள், இவர்கள்
தேன் எடுத்தல், மூலிகை மருத்துவம் பார்த்தல் மற்றும் இயற்கை ஓவியம் வரைவதில்
வல்லவர்கள். காட்டுநாயக்கர்கள் காட்டின் ராஜாக்கள் என அழைக்கப்படுவார்கள். இவர்கள்
இயற்கையில் கிடைக்கும் கிழங்கு வகைகள் மற்றும் தேன் ஆகியவை சேகரித்து வாழ்ந்து
வருகின்றனர்.

தமிழக அரசின் சார்பில் இப்பெருமைமிகு மண்ணின் மைந்தர்களுக்கு வீடு கட்டும்
திட்டம், விலையில்லா கறவை மாடுகள் வழங்குதல், தேன் சேகரிப்புத் தொழில், பெட்டிக்கடை
வைத்தல், கோழிப்பண்ணை தொழில் செய்தல், தெளிப்பான் வழங்குதல், டிராக்டர் மற்றும் பவர்
டிரில்லர் முதலிய இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன் மேற்காணும் அனைத்து திட்டங்களும் மாநிலத்தில் முதன் முறையாக ஒவ்வொரு திட்டத்திற்கும் சாதகமான பகுதிகளையும், பயனாளிகளையும் பல்வேறு துறை அலுவலர்கள் மூலம் தேர்வு செய்து அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளும் செவ்வனே அளித்து வருகின்றது. மேலும் இத்திட்டத்தின மூலம் பெண்கள் அதிக அளவில் பயன்பெறுகின்றனர் என்பது சிறப்பு.

நீலகிரி மாவட்டத்தில் மாண்புமிகு மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின்
ஆட்சியில் சாலைகள், நடைபாதை, கால்வாய்கள், மழைநீர் கால்வாய்கள், கட்டிடங்கள், குடிநீர்
திட்டங்கள், கல்வெட்டுகள், தடுப்புச்சுவர்கள், தெருவிளக்குகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள்
மற்றும் தனி நபர் வீடுகள் போன்ற பணிகளுக்காக 2011 முதல் 2016 வரை உதகமண்டலம்
நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 288 பணிகளுக்கு ரூ.35.86 கோடியும், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 173 பணிகளுக்கு ரூ.31.62 கோடியும், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 104 பணிகளுக்கு ரூ.5.40 கோடியும், நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 152 பணிகளுக்கு ரூ.10.67 கோடியும், அனைத்து பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1340 பணிகளுக்கு ரூ.85.21 கோடியும் மற்றும் அனைத்து ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 34,900 பணிகளுக்கு ரூ.386.39 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர்,
கூடலூர், நெல்லியாளம் ஆகிய நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில்,
சாலைப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், தெரு விளக்குப் பணிகள் உள்ளிட்ட 16,147 பணிகள், 281.88 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தென் மாநிலங்களில் நுரையீரலாகவும் தமிழகத்தின் மேல் நீர்தேக்கத் தொட்டியாகவும்
திகழந்து வரும் “மலைகளின் அரசி” எனப் போற்றி புகழப்படும் நீலகிரி மாவட்டம்
சுற்றுச்சூழலின் பாதுகாவலனாக வலம் வருவது சுற்றுசூழலின் பாதுகாவலனாக வலம் வருவது
இம்மாவட்டத்திற்கே உரித்தான உண்மை ஆகும். இம்மாவட்டத்தின் மண்வளம் தோட்டக்கலை
பயிர்கள் சாகுபடிக்கு ஏற்றதாகவும், தட்பவெப்பநிலை மலை காய்கறிகள் மற்றும் வெளிநாட்டு
காய்கறிகளின் மகசூலுக்கு உகந்ததாக உள்ளது. 6000 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படும்
காய்கறிகள் பிற மாவட்டம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டு வரலாறு படைத்து
வருகிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக இம்மாவட்டம் தோட்டக்கலை பயிர் சாகுபடியில்
கண்டுள்ள முன்னேற்றத்தின் காரணிகளாக விவசாய இரசாய உரங்களும் அனைத்து வகை பயிர்
பாதுகாப்பு மருந்துகளும் இருந்து வரும் நிலையில், இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பதோடு
மண்வளம் குறைந்து உயிரினங்களுக்கு ஊறு விளைவிக்கு நிலை உள்ளது.இரசாயன உரங்கள்
மற்றும் பயிர்பாதுகாப்பு பூச்சிக்கொல்லி மருந்துகளின் தொடர் பயன்பாட்டால் மண்ணின் தன்மை
மாறுபட்டு அங்கக பொருட்கள் அளவு குறைந்து, நுண்பயிர்களின் வளர்ச்சி குறைந்து மண்ணுக்கும்
மனித சுகாதாரத்திற்கும் பாதிப்புகளை உருவாக்கி வருவது நாம் எதிர்கொள்ள வேண்டிய
சவாலாகவே உள்ளது.

மண்வளம் குறைவதால் மலைக்காய்கறிகள் தரம் குறைவதுடன்,
இரசாயனப் பொருட்களின் பயன்பட்டால் உற்பத்தி செலவு அதிகரித்து வருவாய் இழப்பு ஏற்படும்
நிலை நிலவி வருகிறது. விவசாய பயன்பாட்டிற்கு சிற்றோடைகள் பெரும் பங்கு வகித்து
வருகிறது. இரசாயன உரங்களும், பயிர்பாதுகாப்பு மருந்துகளும் சிற்றோடைகளால் அடித்து
செல்லப்பட்டு சமவெளி மாவட்டத்து நீர் நிலைகளை மாசுபடுத்தும் நிலை ஏற்படும் வாய்ப்பு
உருவாகி உள்ளது.

இந்நிலையை மேம்படுத்த இந்த 150-வது ஆண்டு விழா கொண்டாடும்
இத்தருணத்தில் இம்மலை மாவட்டத்தினை இயற்கை வேளாண் மாவட்டமாக அறிவிப்பதில்
அளவில்லா பெருமை கொள்கிறேன். தொடர்ந்து இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும்
பட்சத்தில் மூன்று ஆண்டுகளில் முற்றிலுமாக இயற்கை வேளாண்மை மாறும் என்ற
நற்செய்தியையும் கூறி கொள்கிறேன்.

நீலகிரி மாவட்டமானது 150-வது வருடத்தினை நல்ல முறையில் எட்டிய நிலையில்,
மாவட்டத்தின் பாரம்பரியத்தை காத்திடவும், நீலகிரி மாவட்டமானது உலகளவில் மிக சிறந்த
மலை மாவட்டமாக திகழவும், முக்கியமான சுற்றுலா தலமாக மென்மேலும் வளர
வேண்டுமெனவும் கூறி, அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும்
தெரிவித்து 960 பயனாளிகளுக்கு ரூ.6,74,49,810/- மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

தெங்குமரஹாடா பகுதியில் பாலம் அமைத்துத் தர வேண்டுமென கோரிக்கை
வைத்துள்ளார்கள். அதனை மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று
விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு
மலர் தூவி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மரியாதை செலுத்தினார். பின்னர் பிரிக்‌ஸ்
பள்ளியின் புனரமைப்பு பணிக்காக ரூ.37.50 இலட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டி, பிரிக்‌ஸ் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நடவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப.,
அவர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் திரு.கே.ஆர்.அர்ஜூணன், திரு.எ.கே.செல்வராஜ், அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.கோபாலகிருஷ்ணன் அவர்கள், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அ. சாந்திராமு அவர்கள், தலைவர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் இணையம் திரு.அ.மில்லர் அவர்கள், தமிழ்நாடு மேற்கு மண்டல அஞ்சலக
தலைவர் திரு.அம்ரேஸ்யுப்மன்யூ அவர்கள், தலைமை வன பாதுகாவலர்
அலுவலர் (கோவைகோட்டம்) திரு.தீபக்ஶ்ரீவஸ்தவா, இ.வ.ப., அவர்கள், மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் திருமதி. தெ. சண்முகப்ரியா அவர்கள், மாவட்ட வன அலுவலர் (நீலகிரி
கோட்டம்) திரு.சுமேஷ்சோமன், இ.வ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ப. செல்வராஜ் அவர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.