பள்ளி சென்று வீடு திரும்பிய நான்கு மாணவிகளை காட்டெருமை தாக்க முற்பட்டதால் கீழே விழுந்து காயம்

சட்டன் எஸ்டேட்டில் இருந்து குன்னூரில் உள்ள பள்ளிக்கு சென்று படித்து வரும் மாணவிகள் சுபாஷினி, வைஷ்ணவி, வர்ஷா, சுபஸ்ரீ பள்ளி முடித்து அரசு பேருந்தில் நேற்று (17.9.2018) மாலை சுமார் 6.30 மணி அளவில் ஸ்டேட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி உள்ளனர். அங்கிருந்து இவர்கள் இருக்கும் குடியிருப்புக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் செல்லவேண்டிய நிலையில் படிக்கட்டுகள் வழியாக சென்றுள்ளனர்.

அங்கு மறைந்திருந்த காட்டெருமை திடீரென பள்ளி மாணவிகளை தாக்க முற்பட்டதால் பள்ளி மாணவிகள் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் காட்டெருமை தாக்குதலிலிருந்து தப்பிக்க அங்கும் இங்கும் ஓடி அருகே உள்ள எஸ்டேட் தோட்டத்தில் விழுந்து காயம் ஏற்பட்டது. பயத்தில் உறைந்த மாணவிகள் காட்டெருமை சென்றவுடன் காயத்துடன் வீட்டுக்கு சென்றனர்.

இவர்கள் நிலை அறிந்து பெற்றோர் கதறி பதட்டத்துடன் அருகிலுள்ள எஸ்டேட் மருத்துவமனைக்கு முதல் உதவிக்காக அழைத்துச் சென்று முதல் உதவி அளிக்கப்பட்டு, பின்னர் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளி மாணவிகள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரவு நேரம் என்பதால் அப்பகுதியில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால் வனவிலங்குகள் வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .