தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஒழிப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.09.2018) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை அரசு முதன்மைச் செயலாளர் / ஆணையர் திருமதி.பி. அமுதா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஒழிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையர் அவர்கள் கூறியதாவது,  பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் 23.08.2018 அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் 01.01.2019 முதல் எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களான, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பத்தொன்பது வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் மற்றும் விற்பனை செய்யவும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படும் என்று சட்ட பேரவையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்திருந்தார்கள்.

அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்ற டிசம்பர் இறுதிக்கும் முற்றிலும் தடை செய்யப்படவுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக பசுமைப்படை உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் 09.05.2018 தேதியிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களான வாழை இலை, துணி பைகள், பாக்குமட்டைகள், சில்வர் டம்ளர், கண்ணாடி டம்ளர், மண்குவளைகள், பீங்கான் டம்ளர்கள், எவர்சில்வர் டப்பா, சணல் பைகள், துணி கவசம், தூக்கு வாளி ஆகிய பொருட்களை பயன்படுத்தி உணவு வணிகத்தை சிறப்பாக செய்து இயற்கை வளத்தை காக்க வேண்டும். 

 

பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழித்து சுற்றுச்சூழல், மண்வளம் மற்றும் விலங்கினங்களை பாதுகாக்க வேண்டுமெனவும், பொதுமக்கள் முற்றிலுமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் நீலகிரி மாவட்டம் தமிழகத்திலேயே பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிப்பில் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது என தெரிவித்தார்.