புதிய நலவாழ்வு மையத்தினை மாண்புமிகு நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம், ஜெகதளாவில் இன்று (30.09.2018) பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் புதிய நலவாழ்வு மையத்தினை மாண்புமிகு நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

ஒரு நாடு வளம் பெற வேண்டுமானால் அந்த நாடு ஆரோக்கியம் நிறைந்த நாடாக இருக்க வேண்டும். உடல் நலத்தை பேணி காப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும். குறிப்பாக ஆரோக்கியத்தில் உலகளவில் நமது இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்கள் தாங்கள் சேமித்த பணத்தை உணவு, உடை மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு செலவு செய்வதைவிட எதிர்பாராத வகையில், உடல்நலத்தை பேணிகாப்பதற்காக அதிகளவில் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 6 கோடி கழிவறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மாண்புமிகு பாரத பிரதமரின் ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளிலேயே 8 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் சுகாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில், புகையினால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினை போக்கும் வகையிலும், 8 கோடி ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு மத்திய அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் விலையில்லா எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மத்திய மாநில அரசுகளால் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகறிது. அதில் கடந்த செப்டம்பர் 23ந்தேதி அன்று மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் ஆயுஸ்மான் பாரத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்கள் ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசால் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ், ரூ.2 இலட்சம் வரை வழங்கப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்கள் நலவாழ்வு மையத்தினை தொடங்க அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 1.50 இலட்சம் மக்கள் நலவாழ்வு மையங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 10,487 மையங்கள் உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டம் குன்னூர் வட்டாரத்தில் உள்ள 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் (வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட) மற்றும் 44 துணை சுகாதார நிலையங்களில் தோற்றுவிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு துணை சுகாதார நிலையத்திற்கும் கூடுதலாக ஒரு கிராம சுகாதார செவிலியர் பணியமர்த்தப்பட்டு 24*7 சேவைகள் வழங்கப்படும். இதன்படி அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின்கீழ் துணை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைங்களை நலவாழ்வு மையங்களாக மாற்றப்படுகிறது. இந்த நலவாழ்வு மையங்களில் பின்வரும் 12 விதமாக ஒருங்கிணைந்த நலவாழ்வு சேவை செயல்படுத்தப்படும்.

தாய் சேய் நலம், பச்சிளம் குழந்தைகள் நலம், குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் நலம், குடும்ப நலம், தொற்று நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை, தொற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை, கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை சிகிச்சை, பல் சிகிச்சை, மன நலம், முதியோர்கள் பராமரிப்பு, சிறு நோய் சிகிச்சை அவசர முதல் உதவி சிகிச்சை ஆகிய சேவைகள் அளிக்கப்படும்.

அனைவருக்கு இலவசமாக சுகாதார சேவைகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே நலவாழ்வு திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்தினால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருத்துவ தேவைகள் அவர்கள் வீட்டு அருகிலேயே இலவசமாக கிடைக்கப்பெறும். இதனால் அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்காக உயர் மற்றும் தனியார் மருத்துவமனைகளை நாடும் நிலை மாறும். மேலும் மருத்துவத்திற்காக ஆகும் கைச்செலவு கணிசமாக குறையும்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து குடிமக்களுக்கும் கட்டணமில்லா மருத்துவ சேவை வழங்குவதே ஆகும். நோய் தடுப்பு, சுகாதார மேம்பாடு, நோய் நீக்கம், மறுவாழ்வு ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து குடிமக்களும் அவர்களது தகுதிபாராமல் கட்டணமில்லா மருத்துவ சேவை வழங்குவதே ஆகும். இந்த அரிய திட்டத்தின் முதற்படியாக குன்னூர் வட்டாரத்திலுள்ள ஜெகதளா துணை சுகாதார நிலையம், “நலவாழ்வு மையமாக” இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலனை கருத்தில கொண்டு, அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு, பயன்பெற வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ப. செல்வராஜ் அவர்கள், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு. எஸ். பொற்கொடி அவர்கள், உதவி திட்ட அலுவலர் மரு. விக்னேஷ்., வட்டார மருத்துவ அலுவலர் மரு. ஹாஜாரா பேகம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.