அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழா

நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி மையத்தில் இன்று (17.10.2018) ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் 1876 குழந்தைகளுக்கு ரூ.6.00 இலட்சம் மதிப்பில் ஊட்டசத்து உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி மையத்தில் இன்று (17.10.2018) ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் 1876 குழந்தைகளுக்கு ரூ.6.00 இலட்சம் மதிப்பில் ஊட்டச்சத்து உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கி கூறியதாவது,

இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலங்கள். பிறந்த குழந்தை முதல் ஐந்து வயது வரை தான் அதிக அளவு மூளை வளர்ச்சி அடைகிறது. அச்சமயத்தில் தான் குழந்தைகளுக்கு அதிகபடியான ஊட்டசத்து வழங்க வேண்டும். அப்பொழுது தான் ஊட்டசத்து குறைபாடு இல்லாத குழந்தைகளாக வளர்க்க முடியும். மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு கர்ப்பிணி தாய்மார்களின் இறப்பு விகிதம் 100 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

போஷன் அபியான் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நீலகிரி மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் தேசிய குடும்ப சுகாதாரம் மூலம் கணக்கெடுக்கப்பட்டத்தில் குள்ளத்தன்மை, ஊட்டச்சத்து குறைபாடு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, இரத்தசோகை, எடைகுறைவு உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்கண்ட குறைபாடுகளை குறைக்க வேண்டுமெனில் புரதசத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவு பொருட்களை தவறாது உண்ண வேண்டும்.

இதன் அடிப்படையில் மாவட்டத்தில் 1876 குழந்தைகளுக்கு மும்பையை சேர்ந்த இஷ்பிரவா (ISPRAV) என்ற அமைப்பின் மூலம் நெய், கடலைமிட்டாய், எள்ளுமிட்டாய், மற்றும் பேரீச்சம்பழம் ஆகிய ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் குன்னூர், உதகை நெடுஞ்சாலை பன்சிட்டி ஜங்சன் அருகில் நடைபெற்று வரும் சாலை விரிவுபடுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்கள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முன்னதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளியில் மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாவட் ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தெ.சண்முகப்ரியா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி.தேவகுமாரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.மணிவேலன், இஷ்பிரவா அமைப்பின் தலைவர் திரு.தர்சன்ஷா, அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.