பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்ட சிறப்பு விழிப்புணர்வு முகாம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சாலிஸ்பரி தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் இன்று (17.10.2018) கதர்கிராம தொழில்கள் ஆணையம், மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில்கள் வாரியம் இணணந்து நடத்தும் பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்ட சிறப்பு விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து கூறியவதாவது,

இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை முக்கிய தொழிலாக செய்யப்பட்டு வருவது தேயிலை தொழிலாகும். எனவே தேயிலை தொழிற் தொடங்க கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப்பொருள்கள் தயாரிக்க கடன் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் உற்பத்தி பிரிவில் அதிகபட்சமாக ரூ.25.00 இலட்சமும், சேவை பிரிவில் ரூ.10.00 இலட்சமும் கடன் பெறலாம் 

2016-2017 ஆம் ஆண்டில் 21 பயனாளிகளுக்கு ரூ.25.89 இலட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவியும், 2017-2018 ஆம் ஆண்டில் 23 பயனாளிகளுக்கு ரூ.39.78 இலட்சம் மானியத்துடன் கடனுதவியும், நடப்பாண்டில் இருவரையில் 24 பயனாளிகளுக்கு ரூ.34.13 இலட்சம் மானியத்துடன் கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் பிரதம மந்திரியின் சுய வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டமானது இத்திட்டத்தில் உற்பத்தி பிரிவில்அதிக பட்சமாக ரூ.10.00 இலட்சம் வரையிலான தொழில்கள் தொடங்கவும், சேவைப்பிரிவில் ரூ.5.00 இலட்சம் வரையிலான தொழில்கள் தொடங்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளன. இத்தொழில்கள் தொடங்க கல்வி தகுதி எதுவுமில்லை. இத்தொழில்கள் அல்லாமல் ரூ.25.00 இலட்சம் வரை முதலீட்டில் தொழில் தொடங்க குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில்லை எனவும், நகர்ப்புறங்களில் தொழில் துவங்கும் பொதுப்பிரிவு மனுதாரர்களுக்கு 15 விழுக்காடு மானியமும், சிறப்பு பிரிவினருக்கு 25 விழுக்காடு மானியமும், கிராமப்புறங்களில் தொழில் துவங்கும் பொது பிரிவு மனுதாரர்களுக்கு 25 விழுக்காடு மானியமும், சிறப்பு பிரிவினருக்கு 35 விழுக்காடு மானியமும் அளிக்கப்படுகிறது எனவும், தொழில் தொடங்க விரும்புவோர் www.kviconline.gov.in/pmegp e-portal என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

மாவட்ட தொழில் மையம் சார்பில் பனியர் இனத்தை சேர்ந்த முதல் பட்டதாரி இளைஞரான சந்திரன் என்பவருக்கு டெக்ஸ்டைல் தொழில் தொடங்க ரூ.95,000/ ஒப்பளிப்பு ஆணையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குநர் (தொழில் நுட்பம்) திரு.கார்த்திகைசெல்வன், மாவட்ட தொழில் மைய புள்ளி விவர ஆய்வாளர் திருமதி.ப்ரியா, கிராமிய தொழில்கள் வாரியம் (கோவை) திரு.வள்ளுவன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.