சுற்றுலாத்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று (30.10.2018) சுற்றுலாத்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து கூறியதாவது

மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி (2018-2019) நீலகிரி மாவட்டத்திலிருந்து 75 மாணவர்கள், 75 மாணவிகள் மொத்தம் 150 மாணவ, மாணவிகளை அந்தந்த மாவட்டத்திலுள்ள சுற்றுலாதலங்களுக்கு அழைத்துச் சென்று மாணவ, மாணவியர்களிடையே மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களின் முக்கியத்துவம், வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்ற அறிவுறுத்தலுக்கிணங்க, இன்று கோத்தகிரி, மஞ்சூர் மற்றும் தூனேரி, அணிக்கொரை, மஞ்சக்கொம்பை, அரவேணு, கட்டபெட்டு அரசு பள்ளிகளிலிருந்து படிப்பில் சிறந்த ஏழை, எளிய மாணவ, மாணவர்களை தேர்வு செய்து உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சுற்றுலாவில் பள்ளி மாணவ, மாணவிகள் உதகை அரசு அருங்காட்சியகம், அரசு தாவரவியல் பூங்கா, ஆளுநர் மாளிகை, பழமை வாய்ந்த கட்டிடங்கள் மற்றும் ரேடியோ அஸ்ட்ரானமி சென்டர், காஸ்மிக் ரே லெபாரட்டரி (Cosmic ray laboratory) போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு, வாகன வசதி செய்து தரப்பட்டுள்ளது. இச்சுற்றுலா பயணத்திற்கு அழைத்து செல்லும் ஒவ்வொரு வாகனத்திலும் பாதுகாப்பிற்காக பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். சுற்றுலாவின் போது மாணவ, மாணவியர்களிடம் சுற்றுலா சார்ந்த வினாடி, வினா கேள்விகள் கேட்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நாம் இருக்கும் இடங்களை தூய்மையாக வைப்பது, கழிவறைகளை பயன்படுத்துவது போன்றவை குறித்து பள்ளி மாணவ, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் மாணவ, மாணவியர்கள் அந்தந்த ஆசிரியர்களிடம் இந்த ஒருநாள் சுற்றுலா குறித்து கட்டுரை சமர்பிக்க வேண்டும். அதில் சிறந்த கட்டுரைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்குவார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தெ.சண்முக ப்ரியா, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழக மண்டல மேலாளர் திரு.முரளி, சுற்றுலா அலுவலர் திரு.ராஜன், உதவி சுற்றுலா அலுவலர் திருமதி.துர்கா, ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.