65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று (17.11.2018) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.அர்ஜூணன் அவர்கள், உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கணேஷ், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.சாந்திராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது,

        நீலகிரி மாவட்டத்தில் 13 கூட்டுறவு சங்கங்களை கொண்டு 146 கூட்டுறவு மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி விவசாயிகளின் நலனை காக்கும் பொருட்டு பல்வேறு விவசாய கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 2018-2018 ஆம் நிதியாண்டில் இதுவரை 32 கோடியே 64 இலட்சம் ரூபாய்க்கான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நகர கூட்டுறவு வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு நகைக்கடன், வீட்டுமனைகடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் போன்று பல்வேறு கடனுதவிகள் நடப்பாண்டில் இதுவரை 10 கோடியே 56 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டிற்காக  தும்மனட்டி, எடக்காடு, எத்தையம்மன்,கூடலூர் மற்றும் எருமாடு ஆகிய 5 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மண் பரிசோதனை மற்றும் நீர்பரிசோதனை ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. 56 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களான டிராக்டர், ட்ரில்லர், விசைத்தெளிப்பான், தேயிலை பறிப்பு இயந்திரம் குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. 82 கூட்டுறவு சங்கங்களில் பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டு கிராமப்புற பொது மக்களுக்கு தேவையான அனைத்து சான்று வசதிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் 3 அம்மா மருந்தகம், 2 கூட்டுறவு மருந்தகம் துவக்கப்பட்டு 15 சதவீத தள்ளுபடி விலையில் பொதுமக்களுக்கு தரமான மருந்துகள் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் ரூ.94.97 இலட்சமும் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பினை தொடர்ந்து இம்மாவட்டத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகள் மூலமும் 37,579 உறுப்பினர்களின் விவசாய கடன் ரூ.15238 இலட்சங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 257 முழு நேர கடைகளும் 95 பகுதி நேர கடைகளும் செயல்பட்டு வருகிறது. மேலும் அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின கிராமங்களுக்கு 14 நடமாடும் நியாய விலை கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. வெளிசந்தைகளில் விலையுயர்வினை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம்  சுய உதவிக்குழுக்கள் மாவட்டத்தில் மகளிருக்கான சிறப்பான பணிகளை செய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நமது இலக்கு 1500 கோடி. முதன்முறையாக கூட்டுறவு வங்கிகளில் சுவச்பாரத் மூலம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

        சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகள் அதிக அளவில் கடனுதவி வழங்க வேண்டும். நமது மாவட்டம் இயற்கை வேளாண்மை நிறைந்த மாவட்டமாக உள்ளது. முதற்கட்டமாக 25 சதவீதம் இயற்கை இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை பயன்படுத்தி மேலும் வளர்ச்சி அடைய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

அதனைதொடர்ந்து  18 சுய உதவிக்குழு கடன் 200 உறுப்பினர்களுக்கு ரூ.97.00 இலட்சமும், 9 டாப்செட்கோ மகளிர் சுய உதவிக்குழு 94 உறுப்பினர்களுக்கு ரூ.47.00 இலட்சமும், 3 டாப்செட்கோ ஆடவர் சுய உதவிக்குழு கடன் 30 உறுப்பினர்களுக்கு ரூ.14.25 இலட்சமும், மத்திய கால கறவை மாட்டுக்கடன் 33 உறுப்பினர்களுக்கு ரூ.15.70 இலட்சமும், மொத்தம் 30 குழுக்களை சார்ந்த 357 உறுப்பினர்களுக்கு ரூ.1,73,95,000/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

மேலும் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும், பத்தாம் வகுப்பு, மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற கூட்டுறவுத்துறை பணியாளர்களின் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு நினைவு பரிசு மற்றும் கேடயங்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டுறவு வாரவிழா உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

        இந்நிகழ்ச்சியில் நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திரு.ப.லோகநாதன், துணைப்பதிவாளர் திருமதி.ஜெ.நீலா மற்றும் கூட்டுறவு துறைச்சார்ந்த அலுவலர்கள், சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.