அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்

நீலகிரி மாவட்டம் உதகை ஜே.எஸ்.எஸ்.கல்லூரி கலையரங்கில் இன்று (03.12.2018) நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 50 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 9,64,550/- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உடலில் குறைபாடு இருந்தாலும் குடும்பத்தில் உள்ள எவருக்கும் பாரமாக இல்லாமல் தங்களுடைய பணிகளை தாங்களே செய்து வாழ்க்கையில் முன்னேறும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை உடனடியாக செய்து தரப்படுகிறது. காதுகேளாதோர், வாய்பேசாதோர் மற்றும் பார்வையற்றவர்கள் ஆகியோர்களுக்கு தேசிய அடையாள அட்டை, சுய தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்படுகிறது. மருத்துவ முகாம்கள் நடத்தி அதன் மூலம் கண்பரிசோதனை, எலும்பு மற்றும் மூட்டு பரிசோதனை போன்றவை செய்யப்படுகின்றன.மேலும் ஊக்கத்தொகை, இலவச பேருந்து பயண அட்டை, சுய வேலைவாய்ப்பு, கடும்பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை, பார்வையற்றோருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையம்,மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், கருப்பு கண்ணாடிகள், ஒளிரும் மடக்கு குச்சிகள் போன்ற எண்ணற்ற உதவி உபகரணங்களை தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக தனிகவனம் செலுத்தி வருகிறார்.

எனவே ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளும் தன்நம்பிக்கையோடு முயற்சி செய்து மனநிறைவோடு வாழ்ந்திட தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்தி வாழ்வில் மேன்மையடைந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து 14 பயனாளிகளுக்கு செயற்கை கால்கள் ரூ.7,37,950/- மதிப்பிலும், 13 பயனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள் ரூ.75,740/- மதிப்பிலும், 10 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் ரூ.41,700/- மதிப்பிலும்,8 பயனாளிகளுக்கு காதொலி கருவி ரூ.29,160/- மதிப்பிலும், 5 பயனாளிகளுக்கு வங்கி கடன் மானியத்தொகை ரூ.80,000/-மதிப்பிலும், ஆக மொத்தம் 50 பயனாளிகளுக்கு ரூ.9,64,550/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.கோபாலகிருஷ்ணன், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.இரவிக்குமார், ஜே.எஸ்.எஸ்.கல்லூரி முதல்வர் டாக்டர்.தனபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பாலகிருஷ்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.புஷ்பலதா, அரசுத்துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.