சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (18.12.2018) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (18.12.2018) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையேற்று பேசியதாவது,
ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் அனைத்தும், உலகெங்கும் டிசம்பர் 18 ஆம் நாளை “சிறுபான்மையினர் உரிமைகள்” தினவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். சிறுபான்மையினர் நலனுக்கென அமைக்கப்பட்ட தேசிய சிறுபான்மையினர்ஆணையத்திலன்: வழிகாட்டுதலின்படி நமது நாட்டிலும் மேற்படி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சச்சார் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் நலனுக்கென தனி இயக்குநரகம் அண்ணாசாலை, சென்னை-2இல்
செயல்பட்டு வருகிறது. அதனுடைய மாவட்ட அலுவலகமாக நீலகிரி மாவட்டத்தில் “பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்” செயல்பட்டு வருகிறது. மதவழி சிறுபான்மையினர் என அங்கீகரிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தினருக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு வகையான கல்வி
உதவித்தொகை வழங்கும் திட்டம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2017-2018ஆம் கல்வியாண்டில் மொத்தம் 12,636 சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அவர்தம் வங்கிக்கணக்கில் நேரடியாக மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.நடப்பாண்டில் 2017-2018 ஆம் கல்வியாண்டில் 13,625 மாணவ,
மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலமா மற்றும் இதரப்பணியாளர்களுக்கு நலவாரியம் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் மாவட்டத்தில் 440 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 31 உறுப்பினர்களுக்கு ரூ.78,000/- மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

மேலும் ஆதரவற்ற விதவைகள், கணவரை இழந்த மற்றும் வறுமையில் வாடும் முஸ்லீம் மகளிருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திரட்டப்படும் நன்கொடைக்கு இரண்டு பங்கு இணைமானியம் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நாள் வரையில் 95 ஏழை எளிய முஸ்லீம் மகளிருக்கு ரூ.5,78,833/-மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.20,000/- வீதம் ஆண்டு தோறும் 500 நபர்களுக்கு பண உதவி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.பின்தங்கிய சிறுபான்மையின மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த “டாம்கோ” நிறுவனம் மூலமாக தனிநபர்கடன், குழுக்கடன், கல்வி கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான விண்ணப்பத்தினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், மாவட்ட
கூட்டுறவு இணைப்பதிவாளர் சங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகங்களில் பெற்று விண்ணபிக்கலாம். இது வரையில் 479 நபர்களுக்கு ரூ.203.78 இலட்சம் மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்கவும், பழுது பார்க்கவும் நிதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார். பின்னர் தலா ஒரு பயனாளிக்கு ரூ.3575/- வீதம் 30 பயனாளிகளுக்கு ரூ.1,07,250/-
மதிப்பில் தையல் இயந்திரங்களும், 14 உலமாக்களுக்கு புதுப்பித்த அடையாள அட்டைகளையும் ஆக மொத்தம் 44 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உதகை வருவாய் கோட்டாட்சியர் திரு சுரேஷ், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் திரு.முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் திரு .குழந்தைவேல் உதகை வட்டாட்சியர் தினேஷ்குமார், அரசுத்துறை அலுவலர்கள், சிறுபான்மையினர் நல வாரிய உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.