சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம்

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (20.12.2018) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப, அவர்கள் முன்னிலையில், சிறுபான்மையினர் நல இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் முனைவர்.மா. வள்ளலார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நல இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் அவர்கள் பேசியதாவது, சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நீலகிரி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசால் செயல்படுத்தி வரும் சிறுபான்மையினருக்கான பல்வேறு நலத்திட்டங்கள், சிறுபான்மையினர் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம், கிறித்துவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம், சர்ச்சார் குழு பரிந்துரைகளின்படி ஒருங்கிணைந்த பல்நோக்கு சமுதாய மேம்பாட்டு திட்டம் மற்றும் கிறித்தவ தேவாலயங்களின் கட்டிடங்களை பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு ஆகிய திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட அரசு துறை அலுவலர்கள் மற்றும் உலமாக்கள், கிறித்துவ பாதிரியார்கள், சிறுபான்மையின பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் ஆகியோரிடம் திட்ட செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்து, சிறுபான்மையின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டுமென அறிவுறுத்தினார்.


மாவட்டத்தில் இதுவரை 612 உலமாக்கள் அட்டை வழங்கப்பட்டுள்ளது. சர்ச்சார் குழுவின் பரிந்துரையின்படி நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் சிறுபான்மையினர் அதிகமாக வாழும் பகுதியாக தேர்வு செய்யபட்டுள்ளது. எனவே இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் என்னவென்று கண்டறிந்து அதற்கான முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர்கடன், சுய உதவிக்குழுவிற்கான கடன், கல்வி கடன், கறவை மாடு வாங்க கடனுதவி, ஆட்டோ வாங்க கடனுதவி போன்ற பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின மக்கள் இத்திட்டங்களை பயன்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளுமாறு தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து இம்மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருந்து 60 வயது பூர்த்தி அடைந்த 9 நபர்களுக்கு தலா 1000/- ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும், 30 நபர்களுக்கு புதுப்பித்தல் செய்யப்பட்ட உலமா அட்டைகளையும் சிறுபான்மையினர் நல இயக்குநர் அவர்கள் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.செல்வராஜ், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் திரு.லோகநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.குழந்தைவேல் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், மாவட்ட கருத்தாளர்கள், மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட கருத்தாளர்கள் சிறுபான்மையினர் இனத்தை சார்ந்த அனைத்து மதத்தலைவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்