உலக முதலீட்டாளர் மாநாடு-2019 – குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிறப்பு நோக்கு விழா

நீலகிரி மாவட்டம் உதகை ஹோட்டல் பிரீத்தி கிளாசிக் டவர்ஸ் கூட்டரங்கில் இன்று
(29.12.2018) உலக முதலீட்டாளர் மாநாடு-2019 நடைபெறுவதையொட்டி குறுசிறு மற்றும்
நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிறப்பு நோக்கு விழா மாநிலங்களவை உறுப்பினர்
திரு.கே.ஆர்.அர்ஜூணன் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.கோபாலகிருஷ்ணன்
அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்
திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து 31 நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்த ஆணைகளை வழங்கினார்கள்.

நீலகிரி மாவட்டம் உதகை ஹோட்டல் பிரீத்தி கிளாசிக் டவர்ஸ் கூட்டரங்கில் இன்று (29.12.2018)
உலக முதலீட்டாளர் மாநாடு-2019 நடைபெறுவதையொட்டி குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிறப்பு நோக்கு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று பேசியதாவது,

தமிழ்நாடு அரசின் மிக பெரிய உன்னத மாநாடு 2015 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள்
முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக “உலகளாவிய முதலீட்டாளர்களின் மாநாடு 2019” தமிழக அரசின் சார்பாக சென்னையில் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. அதிக அளவில் முதலீட்டாளர்கள் பங்கேற்கவும், தொழில் முதலீடுகளை அதிக அளவில் திரட்டவும் தமிழக அரசு பல்வேறு வளமிக்க நாடுகளிலும் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பு முகாம்கள் மற்றும் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

மாநிலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் அதிகபடியான முதலீடுகளை திரட்ட அதிக அளவிலான சாத்திய கூறுகள் உள்ளதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நோக்கு முகாம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிறப்பு நோக்கு விழா நடைபெறுகிறது. நீலகிரி மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.100.00 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் 31 நிறுவனங்களிடமிருந்து ரூ.111.25 கோடிக்கு திட்டங்கள் வரப்பெற்றுள்ளன. மேலும் ரூ.10.00 கோடி வரை திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க உன்னத மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாடு வணிக உத்வேகம்
சட்டம் 2018 ன்படி, ஒற்றை சாளர குழு மூலமாக உரிய காலக்கெடுக்குள் அனுமதி மற்றும் ஒப்புதல்
பெற்றுத்தரப்படும். வங்கி கடன் விண்ணப்பங்கள் ஒவ்வொரு மாதமும் விண்ணப்ப வாரியாக ஆய்வு செய்யப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிறு குறு தொழில் தொடங்க நீலகிரி மாவட்டம் இங்குள்ள சூழ்நிலைக்கேற்ப தொழில்கள் தொடங்க முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும். நெகிழி தவிர்த்த மாற்றுப்பொருள் உற்பத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் குறிப்பாக சுற்றுலா மேம்பாடு சார்ந்த தொழில்கள், தேயிலை சார்ந்த தொழில்கள், ஹெர்பல் மற்றும் மருத்துவ தாவரங்கள் மூலம் அத்தியாவசிய எண்ணெய் தயாரித்து விற்கும் தொழிலுக்கு நீலகிரி மாவட்டத்தில் அதிக வாய்ப்புள்ளது. இதற்கு மாவட்ட தொழில் மையம் திட்ட விளக்கத்தோடு உதவி செய்வார்கள். (PMEGP) பாரதபிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தின் கீழ் இவ்வருட இலக்கீடு வெற்றிகரமாக முடிக்கப்பட்டு விட்டது. (NEEDS) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் (UYEGP) வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டங்களிலும் விரைவில் இலக்கீடு முடிக்கப்படும்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் கூடலூரில் மாவட்ட தொழில் மைய அலுவலர்கள் நேரடியாக
வந்து உதவுவது போல, இனி குன்னூர் இன்கோசர்வ் அலுவலகத்திலும், கோத்தகிரி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திலும் மாதம் இருமுறை அலுவலர்கள் வந்து நேரடியாக உதவ வழி வகை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார். அதனை தொடர்ந்து 31 முதலீட்டாளர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த
ஆணைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். முன்னதாக, உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தல் முக்கோணம் பகுதியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.48.20 இலட்சம் மதிப்பில் இரண்டு டன் கொள்ளளவுள்ள நுண் உரம் செயலாக்கி மையத்தினை திறந்து வைத்து, இம் மையத்தில் தினமும் குப்பைகளை துகள்களாக மாற்றி தொட்டிகள் மூலம் பதப்படுத்தப்பட்டு 42 நாட்களில் உரமாக்கப்படும் எனவும், மேலும் இதே போல 6 இடங்களில் நுண்உரம் செயலாக்கி மையம் கட்டப்பட்டு வருகிறது எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.கணேஷ், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.அ.சாந்திராமு, தலைவர், தமிழ்நாடு கூட்டுறவு பால்உற்பத்தியாளர் இணையம் திரு.அ.மில்லர், பொது மேலாளர் (பொ) மாவட்ட தொழில் மையம், மேலாண்மை இயக்குநர் இண்ட்கோசர்வ் டாக்டர் எஸ்.வினீத்,இ.ஆ.ப., மேலாளர்(பொ) மாவட்ட தொழில் மையம் திரு.கார்த்திகைவாசன், கிளை மேலாளர் சிட்கோ (கோவை) திரு.சரவணபவா, கிளை மேலாளர் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்(கோவை)திரு.சுந்தரேசன், முன்னோடி வங்கி மேலாளர் திரு.ராஜ்குமார், புள்ளி விவர ஆய்வாளர் திருமதி.பிரியா, முதலீட்டாளர்கள், நீலகிரி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் முனைவோர் சங்க தலைவர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்