மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய நீலகிரி மாவட்ட ஆட்சியர்

ஊட்டி: ரோஸ் கலர் புடவை, மேச்சிங் பிளவுஸ் என ஆளே மாறி போய் நேரில் வந்து நின்ற பெண்ணை பார்த்ததும் ஊட்டி குளிரையும் தாண்டி அப்படியே ஷாக் ஆகி உறைந்து நின்றார் மாவட்ட கலெக்டர்!! ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் ஒரு பெண் கிழிந்து தொங்கும் ஆடையுடன், சீவாத தலையுடன் 4 மாதமாக அலைந்துதிரிந்து கொண்டிருந்தார். இதனால் உதவி செய்ய யாராவது போனால், அவர்கள் மீது கல்லை எடுத்து எறிந்து விரட்டி விடுவார்… இல்லையென்றால் கிட்ட நெருங்காதவாறு கெட்ட கெட்ட வார்த்தைகளில் பேசி ஓடவிட்டு விடுவார். இதனால் உதவி செய்ய பலர் முயன்றும் இவரை எதுவுமே செய்ய முடியாமல் ஊட்டி மக்கள் திணறினர்.

ஆனால் 2 தினங்களுக்கு முன்பு குன்னூர் சென்று கொண்டிருந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, இந்த பெண்ணை பார்த்ததும் காரை நிறுத்த சொல்லி, “என்ன செய்வீங்களோ தெரியாது, இவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க இருக்க கூடாது, பாதுகாப்பான இடத்தில கொண்டு போய் தங்க வைங்க” என்று உடன் இருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து அதிகாரிகள் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறகட்டளை மாவட்ட தலைவருமான தஸ்தகீர் மற்றும், உலிக்கல் சண்முகம் ஆகியோர் உதவியுடன் கருணை இல்லத்துக்கு கொண்டு சென்று, சாப்பாடு, குளிருக்கு தேவையான கம்பளிகளை கொடுத்து அரவணைத்தனர். இந்நிலையில் நேற்று கருணை இல்லம் சார்பில், அந்த பெண்ணை கலெக்டரிடம் கொண்டு போய் நிறுத்தினார்கள்.

சாலையில் கிடந்த பெண், ரோஸ் கலர் புடவை, மேச்சிங் பிளவுஸ், தலையில் ஸ்கார்ப் சகிதம் வந்து நின்றதை பார்த்ததும் கலெக்டருக்கு ஸ்வீட் ஷாக் ஆகிவிட்டது. மெல்லிதான ஒரு சிரிப்புடன் வரவேற்றார். போறவங்க, வர்றவங்களை கெட்ட வார்த்தை பேசி விரட்டி கொண்டிருந்த இந்த பெண் கலெக்டரை பார்த்ததும் தன்னையும் அறியாமல் இரு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்தார்.

பிறகு பெண்ணை அருகில் உட்கார வைத்த கலெக்டர், “உங்க பேர் என்ன? இப்போ எப்படி இருக்கீங்க” என்றார். அதற்கு அவர், “பேரு சாந்தி… நான் நல்லா இருக்கேன் மேடம்” என்றார். இப்படி இருக்கிறதை விட்டுட்டு எதுக்காக எல்லார் மேலயும் கல்லெறிஞ்சீங்க? ” என்று கேட்கவும், சாந்தி கண் குளமாகி விட்டது.

பொள்ளாச்சி பக்கம் தன் கிராமம் இருப்பதாகவும், வேலை செய்த இடத்தில் ஸ்கூல் படித்து வந்த மகனை யாரோ என்னிடம் இருந்து சிலர் பிரித்து விட்டதால், இப்படி ஆகிவிட்டதாகவும் கூறினார். ஆனால் கிராமத்தின் பெயர், பெற்ற பையனின் பெயர் சாந்திக்கு நினைவுக்கு வராமல் உள்ளது. சில சமயம் அவராகவே அமைதியாக அழ ஆரம்பிக்கிறார்.

இதனை பார்த்த கலெக்டர், “சாந்திக்கு முதலில் மனநலம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள். இவங்க என்ன கேட்டாலும் இல்லைன்னு சொல்லிடாதீங்க.. எது கேட்டாலும் வாங்கி தாங்க… அதுக்கான பணத்தை நான் தர்ரேன்… பையனை கண்டுபிடிக்கும் வேலையிலும் இறங்குங்க”என்று கருணை இல்ல நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார். இப்போது சாந்தி, டிப்-டாப்பாக மட்டுமில்லை, கொஞ்சம் தெம்பாகவே காணப்படுகிறார்.

NEWS COURTESY : https://tamil.oneindia.com/news/nilgiris/nilgiri-s-collector-helps-the-poor-lady-338385.html