பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தேசிய வாக்காளர் தின விழா

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று (25.01.2019) தேசிய வாக்காளர் தின விழா நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது…

இந்திய தேர்தல் ஆணையம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் நாள் துவக்கி வைக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடி வருகிறோம். மேலும் புதிய வாக்காளர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் 73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மீதமுள்ள 27 சதவீத வாக்குகள் பதிவாகவில்லை. எனவே இன்றைய இளைஞர்கள் 31.01.2019 அன்று வெளியிடப்படவுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் 18 மற்றும் 19 வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் தங்களது பெயர்களை சேர்த்து கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் தங்களது முகவரி பெயர் நீக்கல், சேர்த்தல், பிழைகள் போன்றவைகள் ஏதேனும் இருப்பின் அதனை சரி செய்து கொள்ள வேண்டும்.நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 683 வாக்குச்சாவடி மையங்களும், 354 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளது. பள்ளி மாணவ, மாணவியர்களிடம் பள்ளி பருவத்திலேயே வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் 18 வயதை அடைந்தவுடன் அவர்கள் தாமாகவே வாக்களிக்க முன் வரவேண்டும். நமது மாவட்டத்தில் சராசரியாக 5 இலட்சத்து 62 ஆயிரத்து 883 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 இலட்சத்து 72 ஆயிரத்து 625 ஆண் வாக்காளர்களும், 2 இலட்சத்து 90 ஆயிரத்து 280 பெண் வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு வாக்காளர் தொடர்பான குறைகள், கருத்துக்கள், தகவல்கள் குறித்து இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

முன்னதாக வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதி மொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அனைத்து வாக்காளர்களும் தேர்தல் சம்மந்தப்பட்ட தகவல்கள் பெற கருத்துக்கள் கூற புகார்கள் அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் உதவி மையத்தினையும், நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டள்ள வாக்காளர் விழிப்புணர்வு மையத்தினை அதற்கான வழிகாட்டு புத்தகத்தினை மாவட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாடு திட்ட இயக்குநர் திரு.அமர்குஷ்வாஹா,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.செல்வராஜ், குன்னூர் சார் ஆட்சியர் திரு.ரஞ்சித்சிங்,இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.கீதா பிரியா, உதகை கோட்டாட்சியர் திரு.சுரேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.நசுருதீன், உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.