தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவிலான அங்கக வேளாண்மை கருத்தரங்கம்

நீலகிரி மாவட்டம் உதகை பீரித்தி கிளாசிக் டவர்ஸ் கூட்டரங்கில் இன்று
(25.01.2019) தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட
அளவிலான அங்கக வேளாண்மை கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பேசியதாவது…

நீலகிரி மாவட்டமானது இயற்கை வேளாண் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து விவசாயிகள் இயற்கை வேளாண் தொடர்பான திட்டங்கள் மற்றும் செயல்முறைகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. நீலகிரி மாவட்டம் இயற்கை வேளாண் மாவட்டமாக அறிவித்து மாவட்ட அளவிலான ஒரு குழு அமைக்கப்பட்டு அதில் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள்
இக் குழுவின் மூலம் தங்களுக்கு தேவையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இக்குழு மாவட்டத்தை முழுவதும் இயற்கை வேளாண் மாவட்டமாக மாற்ற முயற்சி மேற்கொள்வார்கள். பொதுமக்கள் அதிக அளவில் விழிப்புணர்வு அடைந்து இயற்கை வேளாண் முறையை கையாளுகின்றனர். இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு பொது மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.

நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது. அதே போல
முற்றிலும் இயற்கை வேளாண் மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை மாற்றிட விவசாயிகள் பொதுமக்கள் முயற்சி செய்ய வேண்டும். இந்திய அளவில் சிக்கிம் மாநிலம் முற்றிலும் இயற்கை வேளாண் மாநிலமாக திகழ்கிறது.

அதே போல நீலகிரி மாவட்டத்தை நாம் இயற்கை வேளாண் மாவட்டமாக மாற்றிட அனைவரும்
ஒத்துழைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் அதிக அளவில் இயற்கை வேளாண் பொருட்களை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படும்.விவசாயிகளுக்கு ஏதேனும் வேளாண்மை தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் வாட்ஸ் அப் குரூப் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும், இன்று ஒரு விவசாயிக்கு 1 செண்ட் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் ஒவ்வொரு விவசாயியும் தங்களது விவசாய நிலத்தில் 1 செண்ட் இயற்கை முறையில்
வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பயிரிட வேண்டும். இம்முறை அதிக பயனுள்ளதாக இருப்பின் அதிக அளவில் பயிரிட்டு சாகுபடி செய்து இயற்கை வேளாண்மை முறையை மேம்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்து, இயற்கை வேளாண் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து 4 விவசாயிகளுக்கு ரூ.15.00 இலட்சம் மதிப்பில் மினி
டிராக்டர் வாகனங்களையும், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் சார்பாக இயற்கை
வழி வேளாண்மை பயிற்சியில் பங்கு பெற்ற 4 விவசாயிகளுக்கு பங்கேற்பு
சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குநர் திரு.சிவசுப்ரமணிய
சாம்ராஜ், தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) திரு.ராஜ்கோபு, இணை பேராசிரியர்
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் முனைவர்.கெய்சர்லூர்துசாமி, தோட்டக்கலை
துணை இயக்குநர் திருமதி.மீராபாய் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.