வட்டார போக்குவரத்து துறையின் மூலம் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் இன்று (04.02.2019) வட்டார போக்குவரத்து துறையின் மூலம் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.செல்வராஜ் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தெ.சண்முக பிரியா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து கூறியதாவது,

சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 04.02.2019 முதல் 10.02.2019 வரை சாலை பாதுகாப்பு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவின் நோக்கமே வாகன ஓட்டிகள் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்க வேண்டும்.

மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இவ்வாண்டு தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை மதித்து வாகனத்தை இயக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்பது தான். கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் சாலை விபத்து 48 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு 43 சதவீதமாக குறைந்துள்ளது. எனவும், சாலை பாதுகாப்பு ஏற்படுத்தும் விதமாக இன்று இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இரு சக்கர வாகன முகவர்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி பயிற்சியாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், தனியார் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இப்பேரணியானது உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மார்கெட் வழியாக சேரிங்கிராஸ் வரை சென்றடைந்தது. மேலும் சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்தார்.
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சிறப்பு துண்டு பிரசுரம் மேற்கொள்ளப்பட்டு தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

பின்னர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடமும் மற்றும் வாகன ஓட்டுநர்களிடமும் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
இப்பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ந.வ.கதிரவன், உதவி பொறியாளர் நெடுஞ்சாலை துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உதவி கிளை மேலாளர் உதகை, நகராட்சி பொறியாளர் திரு.ரவி, இயக்க ஊர்தி ஆய்வாளர்கள் திரு.விஸ்வநாதன், திரு.சத்தியகுமார், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், தனியார் வாகன ஓட்டுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.