தீயணைப்பு துறை சார்பாக உதகையில் பேரிடர் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ள நிலையில் தீயணைப்பு துறை சார்பாக உதகையில் பேரிடர் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.


நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. இதனிடையே தொடர் மழை காரணமாக பேரிடர்கள் ஏற்பட்டு அதில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை மீட்பது குறித்த ஒத்திகை உதகையில் நடைபெற்றது. தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தீயணைப்பு துறை சார்பாக நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மழை காரணமாக மரங்கள் விழந்தால் அவற்றை வெட்டி அகற்றுவது, படுகாயம் அடைந்தவர்களை மீட்பது, இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்பது, உயரமான கட்டிடத்தில் இருந்து படுகாயம் அடைந்தவர்களை அழைத்து வருவது போன்றவைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கபட்டது.

மேலும் தீ விபத்து ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய நடமுறைகள் குறித்தும் செய்து காண்பிக்கபட்டது. இந்த ஒத்திகையை மாணவர்கள் மழையில் நனைந்தவாறு கண்டு ரசித்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இது போன்ற ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தபடும் என தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.