இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக மாபெரும் பேரணி

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக உதகையில் நடைபெற்ற மாபெரும் பேரணி 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைகாய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. 15ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கேரட், பீட்ரூட், உருளைகிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்டவைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த விவசாயிகள் மலைக்காய்கறிகளுக்கு இரசாயண உரங்கள் மற்றும் மருந்துகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மண் வளம் பாதிக்கபடுவதுடன், இந்த காய்கறிகளை உட்கொள்ளும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி இயற்கை விவசாய மாவட்டமாக கடந்த ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கபட்டது.

இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடத்தில் கொண்டு செல்வதற்காக தோட்டக்கலைதுறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் பேரணி இன்று நடைப்பெற்றது.

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியினை மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். பேரணியில் இயற்கை விவசாயம் செய்வதன் பயன்களை குறித்தும், இரசாயன மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தீமைகளை குறித்த பதாகைகளை ஏந்திவாறு விவசாயிகள் கோஷங்களிட்டு சென்றனர்.

முக்கிய சாலைகள் வழியாக சென்ற பேரணி லோயர் பஜார், கமர்சியல் சாலை, கார்டன் சாலை வழியாக சென்று அரசு தாவரவியல் பூங்காவில் முடிவடைந்தது.

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு 50சதவீதம் மானியம் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.