மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10.02.2020) நடைபெற்ற
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 44 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.79 கோடி மதிப்பில் கடனுதவிகளை
மாவட்ட ஆட்சியர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
******
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10.02.2020) மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆப.,அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 150 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்களிடம் அளித்த இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு துறை ரீதியான அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.


இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 44 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.79 கோடி மதிப்பில் கடனுதவிகளையும், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் இந்திராகாந்தி மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய தேசிய திட்டம், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திடடம், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், தற்காலிக இயலாமை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை ஆகிய திட்டத்தின் கீழ் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் வட்டத்தைச் சேர்ந்த 39 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000/-பெறுவதற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
நீலகிரி வன கோட்டத்தில் பணிபுரியும் கே.பி.லலிதா என்பவர் தமிழ்நாடு வனத்துறை (கோவை மண்டலம்) சார்பில் நடத்தப்பட்ட 25-வது மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றதற்காக கிடைத்த பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.எஸ்.நிர்மலா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.கண்ணன், உதவி ஆணையர் (கலால்) திரு.பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.கணேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.முகம்மது குதுரதுல்லா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.