திருநங்கை சுய உதவிக்குழுவினரின் மேம்பாட்டிற்காக புதிய ஆவின் பாலகம்

நீலகிரி மாவட்டம் சேரிங்கிராஸ் பூமாலை வணிக வளாகத்தில் இன்று (27.02.2020) திருநங்கை சுய உதவிக்குழுவினரின் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய ஆவின் பாலகத்தினை ஆவின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.எம்.வள்ளலார்,இ.ஆ.ப., அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்.
நீலகிரி மாவட்டம் சேரிங்கிராஸ் பூமாலை வணிக வளாகத்தில் இன்று (27.02.2020) திருநங்கை சுய உதவிக்குழுவினரின் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய ஆவின் பாலகத்தினை ஆவின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.எம்.வள்ளலார்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து கூறியதாவது,
திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அவர்களை ஊக்குவிக்கும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் முதன்முதலாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 5 திருநங்கைகள் அடங்கிய குழுவிற்கு இந்த ஆவின் பாலகத்தை அமைத்து தந்துள்ளது.இந்த பாலகத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மேலும் ஆவின் பாலகம் தொடங்க ஏற்பாடு செய்து தரப்படும்.
ஆவின் தொடங்கிய காலத்திலிருந்து தற்போது வரை வந்த வருமானத்தை விட, இவ்வருடம் அதிக அளவில் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆவின் வருமானத்தை அதிகரிக்க ஆவின் புதிய இரகங்களை அறிமுகப்படுத்தியும், பால் உற்பத்தியை பெருக்க தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு மாடுகள் வாங்க கடனுதவிகளை வழங்கியும் வருகிறது.
மேலும் நலிவடைந்த நிலையிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்தி பால் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என ஆவின் நிர்வாக இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைவர், நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியம் திரு.அ.மில்லர், ஆவின் பொது மேலாளர் திருமதி.சுமதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (திட்ட இயக்குநர்) திரு.பாபு, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், திருநங்கை சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்