நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும்.வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் கடந்த சில ஆண்டுகளாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

இவ்வாறு வரும் வனவிலங்குகளை தடுக்க வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் இருந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு பந்தலூர் பகுதியில் வனத்துறையினர் வாகனம் மூலம் இருந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்த வழியாக வந்த காட்டு யானை ஒன்று மிகுந்த ஆக்ரோஷத்துடன் ஓடி வந்து வனத்துறையினரின் வாகனத்தை தாக்கியது. இதில் வாகனம் நிலைகுலைந்து கவிழ்ந்தது.

இதில் வனத்துறையினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காட்டு யானை ஆக்ரோஷத்துடன் ஓடி வந்து வாகனத்தை தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

வனத்துறையினருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது