நீலகிரி மாவட்டம் குன்னூர் டைகர் ஹில் பகுதியை சேர்ந்த கார்த்திக், அஞ்சலி தம்பதியினர் இவர்கள் இருவரும் டைகர் ஹில் அருகேயுள்ள சிங்காரா பகுதியில் உள்ள தனியார் காட் டேஜில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு இரண்டரை வயதில் மிருதுளாஷினி என்ற குழந்தை உள்ளது. அவர்கள் இருவரும் குழந்தையுடன் அங்கேயே தங்கி பணி புரியும் வகையில் வீடு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கார்த்திக் தனது காரை கழுவி கொண்டிருந்தார்.அப்போது அவரது இரண்டரை வயது மகள் மிருதுளா ஷினி சிமென்ட் தொட்டியில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான மீன் தொட்டியில் உள்ள சிறிய மீன் களுக்கு உணவு வழங்கி விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது எதிர் பாராதவிதமாக மீன் தொட்டியில் குழந்தை தவறி விழுந்துள்ளது. சற்று நேரம் குழந்தையின் சப்தம் இல்லாததால் குழந்தையின் தந்தை கார்த்திக் தேடிய போது குழந்தை தொட்டியில் விழுந்து இருப்பதை கண்டு கார்த்திக் மற்றும் அஞ்சலி ஆகியோர் அதிர்ச்சி அடைந்து குழந்தையை தங்களது இரு சக்கர வாகனத்தில் குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அப்பர் குன்னூர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திக் அஞ்சலி தம்பதியினருக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குன்னூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.