நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். உதகை, கூடலூர் வனக்கோட்டங்கள் புலிகள் காப்பகம் என மூன்றாக பிரிக்கப்பட்டு   தனித்தனியாக வனச்சரகர்கள் வன ஊழியர்கள் கொண்டு வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக புலி, சிறுத்தை, யானைகள் உட்பட ஊர்வன, அரிய வகை பறவைகள் எனஉயிர் சூழல் மண்டலத்தில் வாழக்கூடிய அனைத்து வகை விலங்கினங்களும் இங்கு வாழ்ந்து வருகின்றன.

https://youtu.be/VjTxqB5QjWg

இந்த நிலையில் நீலகிரியில் இலையுதிர் காலம் தொடங்கி உள்ளதால் வனப்பகுதிகள் வறட்சியாக காணப்படுகிறது. மேலும் பகல் நேரங்களில் கடும் வெயில் நிலவி வருவதால் உதகை அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் வரட்சி நிலவி வரும் நிலையில் வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடமாக திகழும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் செடிகொடிகள் கருகியும் மரங்கள் காய்ந்தும் மலைப்பகுதி முழுவதும் கடும் வறட்சி ஏற்பட துவங்கியுள்ளது.

இதனால் வன விலங்குகளுக்கு ஏற்படும் தண்ணீர் பற்றக் குறையை நீக்க வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை தண்ணீர் குட்டைகளில் வனத்துறை சார்பில் தண்ணீர் நிரப்பும் பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன
 
மேலும் வனப்பகுதிகளில் கடும் வறட்சி காரணமாக காட்டுத்தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை சார்பில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

குறிப்பாக மசினகுடியில் இருந்து உதகை செல்லும் சாலையில் உள்ள மாவனல்லா, வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியில் வனத்துறையினர், வேட்டை காவலர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் காட்டுத்தீ பரவாமல் இருக்கு சாலையின் இரு புறத்திலும் தீ மூட்டி அதை அணைத்து வருகின்றனர்

தற்போது வறட்சி காலம் என்பதால முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த கூடாது எனவும், புகைப்பிடிக்க கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்