நீலகிரி மாவட்டம் உதகையை சுற்றியுள்ள எம். பாலடா, கல்லகொரை, கொல்லிமலை ஓரநள்ளி, தேனாடுகம்பை, கடநாடு, காரபிள்ளு, எப்பநாடு, பெர்ன்ஹில் ஆகிய பகுதிகளில் மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் வெள்ளை பூண்டுக்கு ருசி, மணம், காரம் அதிகம் இருப்பதால், தமிழகம் உட்பட பிற மாநிலங்களுக்கும் இங்கிருந்து பூண்டு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக பூண்டு கிலோ ரூ .350 முதல் ரூ .600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அதேசமயம் பூண்டு விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் நீலகிரி மாவட்டத்தில் பல ஏக்கர்களில் விவசாயிகள் பூண்டு பயிரிட துவங்கினார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பூண்டு விலை சரிவை சந்தித்து வருகிறது. தற்போது ஊட்டி பூண்டு கிலோ ரூ .100க்கும், பிற மாநில பூண்டு கிலோ ரூ .80க்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது.
பூண்டு விலை கடும் சரிவை சந்தித்ததால் அதிகளவில் பூண்டு பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.